கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யா கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளது.
சீனா, வட கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவெனில், அந்த நாடுகளில் எந்த விஷயம் நடந்தாலும் அது அவ்வுளவு எளிதாக உலகிற்கு தெரியாது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, அந்த நாடு நோய் தொற்று குறித்த உண்மையை உலக நாடுகளுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.சீனாவுடன் சாலை போக்குவரத்து உள்ள நாடு ரஷ்யா. சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும்போது எல்லையை ரஷ்யா மூடியது. அதன்பின் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலக நாடுகளுக்கு தெரியவில்லை.இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ், தற்போது
ரஷ்யாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. அதனால் அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 130 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நேரம் அதிகமாவதால் சாலைகளில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஆம்புலன்ஸ்கள் காத்திருப்பதை வைத்து பார்க்கும்போது மருத்துவமனையில் இடவசதி இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது. ஆனால் மாஸ்கோ மேயரின் தரப்பில் ‘‘தாங்கள் கொரோனா வைரசின் உச்சநிலையை எட்டவில்லை என்றும், நோயினை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. மாஸ்கோ நகரில் 92 மில்லியன் பவுண்டு செலவில் 10 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு மிகப்பெரிய மருத்துவமனையை ரஷியா கட்டி வருகிறது. மேலும் ரஷியா முழுவதும் 18 மருத்துவமனைகளை கட்டி வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாற்றப்பட்டு வருகின்றன. ரஷியாவில் அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என கூறுகின்றனர் அந்நாட்டின் மருத்துவர்கள்.
Discussion about this post