சுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்

தொடர் கனமழையால், மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர் கனமழையால், மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள குடியிருப்பின் 10 அடி சுற்றுச் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக கூடுதலாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இடிந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version