புதுச்சேரி அருகே மாமூல் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை கைது செய்யக்கோரி வில்லியனூர் பகுதியில் முழு கடையடைப்பு நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியை சேர்ந்த சிவா, பாபு சகோதரர்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர், கிருஷ்ணா நகரை சேர்ந்த சாந்தமூர்த்தி என்ற ரவுடி மாமூல் கேட்டு கடையில் மிரட்டியதாக தெரிகிறது. கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் கடையில் இருந்த ஊழியரை தாக்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 போலீசார் ரவுடி சாந்தமூர்த்தியை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு சாந்தமூர்த்தி தப்பிச் சென்றான். இந்த சம்பவம் தொடர்பாக சிவா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய ரவுடி சாந்தமூர்த்தியை தேடி வருகின்றனர். இதனிடையே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை கைது செய்யக்கோரி வில்லியனூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
Discussion about this post