சென்னையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மீண்டும் தலைதூக்கியுள்ள “ரூட் தல” பிரச்னை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்ட விவகாரத்தில் 9 மாணவர்கள் ரயில்வே காவல்துறையிடம் சிக்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு “ரூட் தல” பிரச்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் கைகளில் புத்தகத்திற்கு பதில் பட்டா கத்தியா என பலரும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் “ரூட் தல” பிரச்னை சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில், மாணவர்கள் மத்தியில் மீண்டும் “ரூட் தல” பிரச்னை தலைதூக்கியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், சென்னை கடற்கரை ரயில் நிலையம் சந்திப்பில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் சென்றனர். அப்போது “ரூட் தல” விவகாரத்தில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
மாணவர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் மோதிலில் ஈடுபட்ட 20 மாணவர்களில் 9 பேடை மடக்கி பிடித்தனர். விசாரணையில், “ரூட் தல” என்ற பெயரில் மாணவர்கள் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி அதில் மற்றொரு தரப்பினரை தாக்க திட்டம் போட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆயுதங்களுடன் தப்பி ஓடிய மற்ற மாணவர்களை ரயில்வே காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரூட் தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரி மாணவர்களை அழைத்து பேசி காவல்துறையினர் அறிவுரை வழங்கிய நிலையில், மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பிரேம்நாத்துடன் செய்தியாளர் ஜெயக்குமார்…