டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் நீண்ட காலமாக தவித்து வந்தார். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடக்க வீரராக களமிறங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை, சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா, முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, 3-வது டெஸ்ட் போட்டியிலும், இரட்டை சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட்டில் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில், பதினெட்டு இன்னிங்சில் விளையாடிய ரோகித் சர்மா 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். இதன் மூலம், சொந்த மண்ணில் குறைந்தது பத்து இன்னிங்சில் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஏற்கனவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன டான் பிராட்மேன், 71 ஆண்டு காலமாக தன் வசம் வைத்திருந்த உள்ளூர் போட்டிகளின் சராசரியை (98.22) தற்போது, ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இதேபோல், நடப்பு தொடரில் இந்திய அணி, இதுவரை 47 சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்தது. இதில், ரோகித் சர்மா மட்டும் 19 சிக்சர்கள் விளாசியுள்ளார். 2013-14-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர்கள் அடித்ததே, அதிகபட்சமாக இருந்தது.

Exit mobile version