நாய் வளர்க்கும் பலருக்கும் சவாலாக இருப்பது அதனை பராமரிக்க ஆகும் செலவினம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற வகையில் செலவில்லாத ரோபோ நாயை உருவாக்கியிருக்கிறது சீன நிறுவனம் ஒன்று. இந்த ரோபோ நாய் பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு…
வந்தாச்சு செலவில்லாத ரோபோ நாய் ))
இனி வரும் காலங்களில் மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ரோபோக்களை கொண்டு செய்யும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
ஹோட்டல்களில் உணவு பரிமாறுவது, வரவேற்பது, ஏன் உணவை ஊட்டிவிடுவது போன்ற வேலைகள் முதல், ராணுவத்தில் போர் புரிவது வரை ரோபோக்களை ஈடுபடுத்தும் அளவிற்கு பல நாடுகளும் தங்களது தொழில்நுட்ப திறனை விரிவுபடுத்தி வருகிறது
இந்தநிலையில், செல்லப்பிராணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் சீனா ”நாய் ரோபோ” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்க்சோ நகரை சேர்ந்த யுனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம் தான் கோ 2 என்ற ரோபோ நாயை உருவாக்கியிருக்கிறது.
இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கோ1 என்ற ரோபோ நாயை 2,700 அமெரிக்க டாலர் செலவில் முதல் ரோபோ நாயை உருவாக்கியது. இந்த நாய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையில் சக்கைப்போடு போட்டதால், அதன் தொடர்ச்சியாக நவீனபடுத்தப்பட்ட கோ 2 என்ற ரோபோ நாயை தற்போது உருவாக்கியுள்ளது.
ரியல் நாயை போல உருவம் கொண்ட இந்த ரோபோ நாய்க்கு உலோகத்தால் ஆன நான்கு கால்கள், உடல், தலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இது கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது. ரியல் நாய் போலவே ஓடுவது, தாவுவது, கொஞ்சுவது போன்ற செயலை செய்யும் கோ 2 ரோபோ நாயை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதனை வாக்கிங் அழைத்து செல்லும் போது செல்லும் பாதையை டிராக் செய்து, செல்ல வேண்டிய தூரம், வழியில் உள்ள தடைகள் ஆகியவற்றை மேப்பிங் திறன் மூலம் கண்டறிந்து தனது எஜமானின் செல்போனுக்கு அனுப்பும், மேலும் இரவில் சிசிடிவி பொருத்தப்பட்ட சிறந்த காவலனாகவும் செயல்படுகிறது.
மேலும் இயற்கை செல்லப்பிராணிகளை போல இதற்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை, செலவுகளும் இல்லை, இதில் பொருத்தப்பட்டுள்ள இன்பில்ட் பேட்டரி மூலம் இதனை சார்ஜ் செய்தால் மட்டும் போதும் எஜமானின் கட்டளையை கனக்கச்சிதமாக செய்து முடிக்கும்.
பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோ 2 ரோபோ நாயின் வருகை சீன ரோபோ வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.