சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அண்ணாசாலை, பாரிமுனை, மெரினா, எழும்பூர், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஒரு மணி இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அவ்வழியே சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில், சாலையின் நடுவே ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். நீண்ட நேரமாகியும், மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால், மக்கள் இன்னலுக்கு ஆளானார்கள். சாலையை கடக்கமுடியாமல் அவதியடைந்தனர்.
ஜி.என் செட்டி சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். மழை நீருடன், கழிவு நீரும் கலந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை புழல் அடுத்த காவாங்கரையில் கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியது. குடியிருப்புப் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கப்படாததால், சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.