மதுரை சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று காலை ஏழு முப்பது மணியளவில் தங்கச்சப்பரமானது நான்கு மாசிவீதிகளில் வலம் வந்தது. அதேபோல் இன்று இரவு 7:30 மணியளவில் தங்க ரிஷபம் – வெள்ளி ரிஷபம் ஆகிய வாகனங்கள் நான்கு மாசிவீதிகளில் வலம் வரும். மாலை ஆறு மணியளவில் யானை மஹால் முன்பு, அருள்மிகு திருஞானசம்பந்தப் பெருமாள், சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறான, “சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை” தல ஓதுவாரால் சொல்லப்பட்டு, மதுரை திரு.கே.முரளிதரன் குடும்பத்தினர் கட்டளை திருஅன் முடித்து, பின் திருவீதி உலாவிற்கு எழுந்தருளும்.
ரிஷப வாகனம்
பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதிர்ரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் யிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவரெம்பெருமா னடிகளே!
– சம்பந்தர் தேவாராம்.
திருவிழாவிற்கான தத்துவமும் பலனும் என்னவென்றால், ஆறாம் நாள் திருவிழா, காமதி ஆறும், கலையாதி ஆறும், பதமுத்தி ஆறும், வினைக்குணம் ஆகியனவற்றை ஒழித்தற் பொருட்டு நிகழ்வதாகும். ஆறாம் நாள் இரவு, விருஷபவாகன சேவை மிகவும் முக்கியமானது. அடியர்களுக்கு அருள்புரிய ஆண்டவன், விருஷபவாகனத்தில் எழுந்தருளி வருவதைப் புராணாதிகளால் நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளை நிறம் அதனிடத்து எவ்வித மாசும் இல்லை என்பதை உணர்த்தும். தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாகக் கொண்டுள்ளது. சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாய் அமைந்துள்ளன. மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து, இறைவன் வந்து அமர்வான் எனபதைக் குறிக்கின்றது. இது அனுக்கிரகக் கோலம்.