மருதூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தவருக்கு வெகுமதி வழங்கியும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
கரூர் மாவட்ட குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டல், மளிகை கடை, கறி கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளிலிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனிடையே நடுப்பட்டியில் சோதனையில் ஈடுபட்டபோது கடந்த இரு ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் ஜமால் முகம்மது என்பவர் மளிகை கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து ஜமால் முகம்மதுவுக்கு 100 ரூபாய் வெகுமதி அளித்த அதிகாரிகள், அவரின் முன்மாதிரி செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.