சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஒரு சில சேவைகளுக்கு தளர்வுகள்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஒரு சில சேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவ துறை சார்ந்த சேவைகளுக்கு தொடர்ந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதைபோல், வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களை அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் துறை உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத்துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் . மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை என்றும், அதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது. வங்கிகள் 33 சதவிகித பணியாளர்களுடன் ஜூன் 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏடிஎம், அது தொடர்பான வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

பொதுவிநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்கலாம். தொலைபேசி மூலம் வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவை அனுமதி வழங்கப்படும் என்றும், டோர் டெலிவரி செய்யும் நபர்கள் தங்கள் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். அம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையற்கூடங்கள் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம். பணியிடங்களில் தங்கியிருந்து பணியாற்றும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமான பணி அனுமதிக்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொழிற்சாலை வளாகத்தில் 12 நாட்கள் தங்கி பணியுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், உரிய பாதுகாப்புடன் செயல்பட அனுமதி வழஙகப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் ரயில்கள், விமானங்கள், கப்பல் போக்குவரத்து தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version