ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பண வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பெரிய மார்க்கெட்டுகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக காய்கறிகள் பழங்கள் விற்கும் கடைகளை விசாலமான பகுதிகள், மைதானங்களில் அமைத்து சமூக விலகலை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக மக்கள் வாழும் குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்புத் துறையின் அதிநவீன இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், முதியோர், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் அவசர உதவி தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.