அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பதவியேற்றது முதலே சர்ச்சைக்குரியவராகத்தான் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிபராகப் பதவியேற்பதற்கு முன், அவர் ஒரு தொழிலதிபர். அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம். அவரது வெற்றியிலிருந்தே சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. அதிபர் ஆன பிறகு அவர் எடுத்த பெரும்பாலான கொள்கை முடிவுகள், அவரது பேச்சுகள், கருத்துகள், செயல்பாடுகள் எல்லாமே சர்ச்சைக்குள்ளாயின. அதன் உச்சக்கட்டமாகத்தான் உக்ரைன் அதிபருக்கு அரசியல் சுயலாபத்துக்காக அழுத்தம் கொடுத்ததாகத் தற்போது அவர்மீது தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரச்னை தொடங்கியது இப்படித்தான், அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி உடன் மேற்கொண்ட ஒரு தொலைபேசி அழைப்பிலிருந்து தொடங்குகிறது. உக்ரைனில் எரிவாயு நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருக்கிறார், டிரம்ப்பின் அரசியல் எதிரி ஜோ பிடெனின் மகன் ஹன்டர். இவர், தன் தந்தையின் பதவியால் பலன் அடைந்ததாகப் புகார் இருக்கிறது. உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஹன்டர்மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததாகவும், அவ்வாறு நெருக்கடி கொடுக்க மறுத்ததால், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிவந்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவித் தொகை நிறுத்தப்பட்டதாகவும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரபட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, இரண்டு அவைகள் செயல்படுகின்றன. கீழவையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட் என அழைக்கப்படும் மேலவையில், மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். முதலில் இந்தத் தீர்மானங்கள் கீழவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், இந்தத் தீர்மானம் மேலவையில் விவாதிக்கப்படும். இந்த விவாதம் அமெரிக்காவின் தலைமை நீதிபதியின் முன்னிலையில் நடைபெறும். இதில் மூன்றில் இரண்டு என்ற கணக்கில், பெரும்பான்மை ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டிரம்ப் பதவியிலிருந்து நீக்கப்படுவார். அதன் மூலம் டிரம்ப், அமெரிக்க அரசியலில் இந்தப் பதவி நீக்கத் தீர்மானத்தை சந்திக்கும் நான்காவது அதிபர் ஆவார்.
இந்நிலையில் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ‘நான் எந்த தவறும் செய்யாத போது எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது நியாயமற்றது எனவும் ஜனநாயக கட்சியால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். தீர்மானம் மேலவையில் விவாதிக்கபட்டு டிரம்ப் பதவியில் தொடர்வாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பதை வரும் காலங்கள்தான் முடிவு செய்யும்.