சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த நவம்பர் மாதம் சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அந்த சுவடுகள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில், தற்போது பெய்த மழையால் மீண்டும் சென்னை நகர வீதிகளும், சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல இடங்களில் மின்சாரப் பெட்டியையொட்டி மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே மழைநீரை கடந்து செல்லும் நிலை உள்ளதாக குற்றச்சாடடு எழுந்துள்ளது.
சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை, ரமா தெரு, அசோக் நகர் 18 வது அவென்யூவை ஒட்டியுள்ள 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் தண்ணீர் இன்னும் வடியாததால் நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தேங்கி உள்ள தண்ணீரை, 3 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அகற்றாததால் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாம்பலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.