நாட்டின் 71வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
71வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான பதக்கம் மற்றும் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராஜாவுக்கு அண்ணா பதக்கமும், பொதுமக்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமிக்கும் வழங்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த விவசாயி யுவக்குமாருக்கு, அண்ணா விருதையும் முதலமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து தமிழக காவல்துறையின் இருசக்கர வாகன சாகச அணிவகுப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வடமாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் அசத்தலாக நடைபெற்றன…
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கி அலங்கார வாகன ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அன்னிய முதலீடுகளை ஈர்த்தார். இதனை எடுத்துரைக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார். பின்னர் முதலமைச்சர், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.