தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
அவசர சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் கிடைக்காமல், நோயாளிகளின் உறவினர்கள் சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விடிய விடிய காத்திருந்தும் மருந்து கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனால், ரெம்டெசிவிர் மருந்துக்காக டோக்கன் பெற மக்கள் முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் கவுன்ட்டர்கள் அமைத்து மருந்துகளை அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி இயன்முறை மருத்துவக் கல்லூரியில், நாளொன்றுக்கு 300 ரெம்டெசிவிர் குப்பிகள் விநியோகம் செய்யப்படுவதாகவும், போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்பட்டதால், பல மணி நேரம் நீண்ட வரிசையில் மருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மருந்து விற்கப்பட்டதாலும், டோக்கன் முறை நிறுத்தப்பட்டதாலும், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்துகள் போதிய அளவு இருப்பு இருந்தும் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் வழங்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இரண்டு நாட்கள் இரவு, பகலாக காத்திருந்தும் ரெம்டெசிவிர் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் உளன்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஒருவருடன் வந்த திமுக பிரமுகர் ஒருவர், தான் அமைச்சர் நேருவின் PA எனக் கூறிக் கொண்டு, ரெம்டெசிவிர் மருந்தைக் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உயிர் காக்கும் மருந்தை பெற இரவு பகலாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் திமுகவினர் அதிகாரத்தை பயன்படுத்தி மருந்தை பெற முயற்சிப்பது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரியில், ரெம்டெசிவிர் மருந்துக்கு 3வது நாளாககடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் விநியோகிக்கப்பட்டன. இதனால், அவசர சிகிச்சைக்காக மருந்து வாங்க வந்தவர்கள் செய்வதறியாது திகைத்து போயினர்.
இன்றைய தினம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்தவர்களுக்கு,10 நாட்களுக்குப் பின்னர், 21, 22ம் தேதிகளிலேயே மருந்து கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை என்னவாகும் என்று பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
Discussion about this post