திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, திமுக எம்.எல்.ஏ நிலத்தை அபகரித்து ஏமாற்றியதாகக் கூறி, தீக்குளித்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலைப் பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் நந்தன். இவருக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை, ஆம்பூர் திமுக எம்.எல்.ஏ வில்வநாதன், அடியாட்களுடன் மிரட்டி பறித்ததாகவும், மாற்று இடம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மனம் வேதனை அடைந்த முதியவர் நந்தன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்ட ஆட்சியர் மாற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், திமுக எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் திமுக கிளை பிரதிநிதி சிவா, அடியாட்கள் பாலாஜி, செந்தில் சாமிநாதன், ராஜேந்திரன், கண்ணன், திருப்பதி ஆகியோர் பெயரை சொன்னதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் உடல் ஆம்புலன்சில் கதவாளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி ஆம்புலன்சை வழிமறித்து உறவினர்கள் போராட்டனர்.
Discussion about this post