சென்னையில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்கு படுத்த, மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் புள்ளி விவரத்தின் படி, 39,000 தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அதில், 23,000 பேர் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதில், தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை, விற்பனை மண்டலங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும், வியாபாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மண்டலங்களிலும், சாலையோர விற்பனை மண்டலங்களை கண்டறியவும், வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் விற்பனை மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யவும், மண்டல அளவில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.