தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன படுக்கை வசதி உள்ளிட்ட பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் திங்கள் முதல் வியாழன் வரை இயக்கப்படும் பேருந்துகளுக்கான, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பழைய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வார நாட்களில், குளிர்சாதன படுக்கை பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 45 காசுகளும், சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு 20 காசுகளும், கிளாசிக் பேருந்துகளுக்கு, 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சேலம் – சென்னைக்கு 725 ரூபாயிலிருந்து 655 ரூபாயாகவும், கோவை – சென்னைக்கு 1080 ரூபாயிலிருந்து 975 ரூபாயாகவும், கோவை – பெங்களூரு 805 ரூபாயிலிருந்து – 725 ரூபாயாகவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை – மதுரைக்கு 975 ரூபாயிலிருந்து 880 ரூபாயாகவும், சென்னை – தேனிக்கு 1115 ரூபாயிலிருந்து 970 ரூபாயாகவும், சென்னை – திருநெல்வேலி 1315 ரூபாயிலிருந்து 1145 ரூபாயாகவும், சென்னை – திருச்சிக்கு 705 ரூபாயிலிருந்து 635 ரூபாயாகவும் பெங்களூரு – நாகர்கோவிலுக்கு 1480 ரூபாயிலிருந்து 1345 ரூபாயாகவும், சென்னை – மைசூருக்கு 1065 ரூபாயிலிருந்து 965 ரூபாயாகவும் சென்னை – பெங்களூருக்கு 775 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.