கழிவு நீரில் இருந்து மதுபானம்… இது சாத்தியமா?
கழிவுநீரைக் கண்டால் நம்மில் பெரும்பாலானோர் முகம் சுளித்து, மூக்கை மூடிக்கொள்வோம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று, கழிவு நீரிலிருந்தே புதிய முறையில் பீர் தயாரிப்பினை மேற்கொண்டுள்ளது.
அதாவது, எபிக் க்ளீன்டெக் ((Epic Cleantec))) எனும் நிறுவனம் 40 மாடி கட்டடத்திலிருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரிலிருந்து ஆன்சைட் கிரே வாட்டர் என்கிற நுட்பத்தை பயன்படுத்தி பீர் தயாரித்துள்ளது.
ஆன்சைட் கிரே வாட்டர் என்கிற சிஸ்டமானது துணி துவைக்க, குளிக்கப் பயன்படுத்தும் நீர் மற்றும் மொட்டை மாடியில் வீணாகும் மழை நீர் ஆகியவற்றை சேகரித்து, வடிகட்டி, அதிலுள்ள கிருமிகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறது. பின்னர் அந்த நீரை கொண்டுதான் பீர் தயாரிக்கப்படுகிறது.
குடிநீரை விட இது பாதுகாப்பானதா?
வீடுகளிலும், பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரைக்கொண்டு சுத்திகரிப்பு செய்து, அதன் பின்னர் அந்த நீர், நவீன முறையில் வடிகட்டப்பட்டு, நுண்ணிய துகள்கள், கிருமிகள் அகற்றப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் என்று குறிப்பிடப்படும் சவ்வூடு முறையின் மூலம், அந்நீரில் இருக்கும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் மிகத் தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது. அதன்படி 7,570 லிட்டர் கழிவு நீரை பயன்படுத்தி, 7 ஆயிரம் பீர் கேன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிஸ்டம் மூலமாக ஒரு நாளைக்கு 28 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும். அதுவே ஒரு வருடத்திற்கு 94 லட்சத்து 63 ஆயிரத்து 529 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம். இந்த பீர், குடிநீரைக் காட்டிலும் அதிக பாதுகாப்பானது என ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒருவேளை எதிர்காலத்தில் அதிகப்படியான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டானால், மறுசுழற்சி செய்யும் திட்டம் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post