புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக தொல்லியல் துறை சார்பாக 3,51,64,000 ரூபாய் மதிப்பில், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டை, பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னம் மற்றும் நாகையில் உள்ள டச்சுக் கல்லறை ஆகிய 3 நினைவுச் சின்னங்கள் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புனரமைக்கப்பட்ட 3 நினைவுச் சின்னங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கைத்திறன்த் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக, தமிழ்நாடு புதுமை நிதித் திட்டத்தின் கீழ் 1,88,00,000 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், 1,86,30,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.

2018-2019ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை பெற்ற அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லோகநாதன் மற்றும் திருச்சி பிஷாப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் தர்ம சாஸ்தா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்தார்.

Exit mobile version