ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷ்குமார். கடந்த 5 ஆம் தேதி தனது நண்பர்களுடன் நிலம் வாங்குவது தொடர்பாக, படப்பை அடுத்த ஒரத்தூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், சதிஷீகுமாரின் காரை முந்தி வழிமறித்து நிறுத்தியது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த சதீஷ்குமாரின் நண்பர்கள் அங்கிருந்து அலறியடித்துகொண்டு ஓடினர். வெட்டுப்பட்ட சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த கொலை தொடர்பாக சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த டேவிட் பில்லா, கார்த்திக், ஆகாஷ், ஸ்ரீநிவாசன், ஆறுமுகம் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சதீஷ், கார்த்திக் என்பவரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 70,000 பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், அதேபோல் டேவிட்டுடன் தொழில் போட்டியில் இருந்ததால் கார்த்திக்கும், டேவிட்டுடன் இணைந்து சதீஷை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். கொலை செய்த 5 பேர் மீதும் சட்டப்பிரிவு 341, 302, 147, 148 -ன் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Discussion about this post