பாகிஸ்தானின் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார்நிலையில் உள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்தியப்பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இதையடுத்து எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வான்மண்டலத்தில் உள்ள 11 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மூடியுள்ளதாகவும் இதனால் பாகிஸ்தான் அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும், அதை சந்திக்க முழு தயார்நிலையில் இந்திய விமானப்படை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், எல்லையில் உள்ள விமானப்படை தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே, எல்லையில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்த ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post