இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா கொடிக்கட்டி பறக்கிறது. தற்போது ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் விளையாடியுள்ளன. நெற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியானது லக்னோ சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியை பெங்களூரில் எதிர்கொண்டது. சொந்த மண் என்றபோதிலும் எதிர்த்து நிற்கும் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கும் பெங்களூர் சொந்தமண் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நல்ல ஸ்கோரையே எட்டியது. குறிப்பாக கேப்டன் பாஃப் டூ பிளெசிஸ்சும் விராட் கோலியும் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பினை அமைத்தனர். இருவரும் சேர்ந்து 96 ரன்கள் அடித்த நிலையில் கோலி 61 ரன்னில் அமித் மிஷ்ரா பந்துவீச்சில் மார்கஸ் ஸ்டோய்னிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் பிக்ஷோ என்று அழைக்கப்படும் மேக்ஸ்வெல்லும் டூ ப்ளெசிசும் அணியின் கட்டமைப்பை வலுப்படுத்தினார்கள்.
ஆட்ட தொடக்கத்தில் மெதுவாக விளையாடிய டூ ப்ளெசிஸ் கோலி வெளியேறியதும் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். குறிப்பாக ஒரு சிக்சரை சின்னச்சாமி ஸ்டேடியத்தைத் தாண்டி பறக்க விட்டார். 116 மீட்டர் சென்ற அந்த சிக்சர் தற்போதைய ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட அதிக மீட்டர் சென்ற சிக்சர் ஆகும். மேக்ஸ்வெல் 59 ரன்களில் வெளியேற ஆட்ட முடிவில் 212 ரன் அடித்தது ஆர்சிபி. 79 ரன்னுடன் டூ ப்ளெஸிசும் 1 ரன்னுடன் தினேஷ் கார்த்திக்கு களத்தில் நின்றனர்.
பின்னர் 213 ரன் என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங்கைத் தொடங்கியது. தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி லக்னோவிற்கு காத்திருந்தது. சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி கைல் மேயர்ஸ் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு ஐபிஎல்லில் மீண்டும் விளையாடும் வெயின் பார்னல் ஓவரில் தீபக் ஹூடா வெளியேற அதே ஓவரில் க்ருணால் பாண்டியாவும் வெளியேறினார். பிறகு மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல்.ராகுல் 18 ரன்களில் சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என்று நினைக்கையில் ஸ்டாய்னிசும் நிகோலஸ் பூரனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்டாய்னிஸ் 60 ரன்கள் அடித்து வெளியேற, பூரண் 15 பந்துகளில் அரைசதத்தினை பூர்த்தி செய்தார். பிறகு 62 ரன்னில் அவுட்டானர். அப்போது கூட வெற்றி வாய்ப்பு ஆர்சிபியின் பக்கம் வீசியது. ஆயுஸ் பதோனி 30, உனத்கட் 9. மார்க் வுட் 1 என்று வெளியேற ஒரு விக்கெட் எடுத்தால் ஆர்சிபி வெல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஓரளவு சமாளித்த ஆவேஷ் கானும் ரவி பிஷ்னாயும் நின்று ஆட கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிபெற்றனர். இந்த வெற்றியின் மூலம் நான்கு புள்ளியை லக்னோ பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து இரண்டு தோல்வியை ஆர்சிபி சந்தித்துவிட்டது. பேட்டிங் நன்றாக இருந்தும் பவுலிங் சொதப்பியது மிகவும் வருத்தத்தக்க விசயம் என்று டூ ப்ளெசிஸ் கூறினார். அப்போ இந்த முறையும் ஈ சால கப் நம்தே இல்லையா என்று நெட்டிசன்கள் ஆர்சிபி அணியினை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.
Discussion about this post