கன்னியாகுமரியில், நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய ஆஸ்திரேலியன் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் அபூர்வ நண்டு கண்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாவுத்துறையைச் சேர்ந்த மீனவர் சாஜூ, கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவரது வலையில் அபூர்வமான நண்டு வகை ஒன்று சிக்கியிருந்தது. அந்த நண்டை மீட்ட சாஜூ அதனை அக்வா மீன் கண்காட்சிக் கூடத்தில் ஒப்படைத்தார்.
ரெட் ப்ராக் கிராப் என அழைக்கப்படும் இந்த நண்டு குயின்ஸ்லாந்தின் யெப்பூன் முதல் நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் கரையோர நீர்ப்பரப்பிலும் வாழ்கின்றன. 150 மில்லி மீட்டர் வரை வளரக்கூடிய இந்த நண்டு 900 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இந்த அபூர்வ நண்டை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.