அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை பரிசாக வழங்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 17ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 16 காளைகளை தழுவி, சிறந்த மாடுபிடி வீரராக ரஞ்சித்குமார் தேர்வானார். இதேபோல், குலமங்கலம் மாரநாடு என்பவரது காளை, வீரர்களை பந்தாடி சிறந்த காளையாக தேர்வானது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 20ம் தேதியன்று, மாடுபிடி வீரர் ரஞ்சித்குமார் மற்றும் காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர் ரஞ்சித்குமாரை பாராட்டி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை பரிசாக வழங்கினார். அப்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதேபோல், சிறந்த காளையின் உரிமையாளரை பாராட்டி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கார் பரிசாக வழங்கினார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் காரை பரிசாக பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பரிசு பெற்றவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post