சுதந்திர போராட்ட வீரரும், அமைச்சராகவும் இருந்த ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு முடிந்த பிறகு, ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம், பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில், அவை முன்னவரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த போது ராமசாமி படையாட்சியார் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார். திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், காயிதே மில்லத், ராஜாஜி, காமராஜர், பெரியார், முத்துராமலிங்கத் தேவர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய 11 பேரின் உருவப்படம் சட்டப்பேரவையில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 12-வது உருவப்படமாக ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்திற்கு கீழே வீரம், தீரம், தியாகம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
படத்திறப்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ராமசாமி படையாட்சியாரின் மகன் ராமதாஸுக்கு முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.