காவிரி பாசன மாவட்டங்ளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை முழுமனதுடன் வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளதை முழு மனதுடன் வரவேற்று, பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பின் மூலம், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டிருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறிவரும் முதலமைச்சர், அது வார்த்தை அல்ல, வாழ்க்கை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.