நாம் நமது பள்ளிக்கூடங்களில் வழிபாடு நாட்களில் உறுதிமொழிக் கூறுவது நடைமுறையில் உள்ளது. ”இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்” என்று அந்த உறுதிமொழியானது அமைந்திருக்கும். நம் அனைவரிடமும் சகோதரத்துவத்தினை வளர்த்தெடுப்பதற்கு சில விழாக்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்தியா, கலாச்சார மிக்க விழாக்களை அதிக அளவு கொண்டாடும் ஒரு நற்திருநாடு. அப்படி இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ரக்ஷா பந்தன் ஆகும்.
ரக்ஷா பந்தன் :
ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு “ராக்கி” என்று அழைக்கப்படும் கயிறு ஒன்றினை கையில் கட்டிவிடுவர். அதனைக் கட்டிவிட்டு நெற்றியில் திலகமும் இடுவர். இந்த நிகழ்வு தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் பிரபலம். அதற்கு ஒரு புராணக் காரணமும் உண்டு.
மகாபாரத புராணத்தின்படி, கிருஷ்ணரின் கையில் குருதி வடியும்போது, திரெளபதி தன் புடவையின் நுனியைக் கிழித்து இரத்தம் வரும் இடத்தில் கட்டி விடுவார். இப்படி தன் மீது அன்பு கொண்டிருக்கும் திரெளபதியிடம் கிருஷ்ணர் வாக்கு ஒன்றினை தருவார். “என்ன இடர் வந்தாலும், நீ கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வருவேன் திரெளபதி” என்பது அவரின் வாக்கு. அதன்படி, கெளரவர்கள் மத்தியில் திரெளபதி மானபங்கம் படுத்தப்படும்போது கிருஷ்ணர் காப்பாற்றுவார். இதன் நிகழ்வின் மூலம் அண்ணன் தங்கை அன்பு வெளிப்பட்டு இருப்பதால், இதனையே ரக்ஷா பந்தனாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கின்றனர் நம்மவர்கள்.
இந்த நிகழ்வில் சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டிவிடுதவதுபோல, சகோதரர்கள் சகோதரிகளுக்கு பரிசிப் பொருட்களையும். அவர்களை பாதுகாப்பாக பேணிக்காப்போம் என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறார்கள்.