எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு மாநிலங்களவை இன்று கூடியது. அப்போது, மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், ரபேல் விவகாரத்தில் மத்திய நிலைக்குழு விசாரிக்க வேண்டும் எனக்கோரி காங்கிரசும் முழக்கங்களை எழுப்பின.

இந்நிலையில், முழக்கங்களை எழுப்பி நேரத்தை கடத்தாமல், ஆரோக்கியமான விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற அவை தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மக்களவை கூடியதும், மேகேதாட்டுவில் ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி, அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் அவை முன்பு திரண்டு கூச்சலிட்டனர். அலுவல் பணிகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும், தொடர் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version