பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் – சொந்த ஊர் திரும்பினார்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், 30 நாள்கள் பரோலில் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு சென்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி, அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்த பேரறிவாளன், இன்று காலை பரோலில் சென்றார். பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டுள்ளார். ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காலம் முடியும் வரை பேரறிவாளனுக்கு மருத்துவம் பார்க்க பரோல் வழங்க வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version