முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

 

முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான அம்பரீஷின் உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான அம்பரீஷ் தனது திறமையான நடிப்பால் கன்னடத் திரைத்துறையில் பிரபலமடைந்தார். அரசியலில் குதித்த அவர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒளிப்பரப்புத்துறை இணை அமைச்சராகவும் மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

சமீப காலமாக உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உயிரிழந்தார். அவரது உடல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் தலைவர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்பரீஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோரும் அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே மாநில அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version