கால் நூற்றாண்டு காலம் ரசிகர்கள் உருவாக்கிய மாயபிம்பத்தை, கலைத்தார் ரஜினிகாந்த்

கால் நூற்றாண்டுகளாக வருவாரா… வரமாட்டாரா… என்ற பதற்றத்திலேயே தமது ரசிகர்களை வைத்திருந்து, அரசியல் நாடகம் நடத்தி வந்த நடிகர் ரஜினி, நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கால் நூற்றாண்டுக் காலம் தன்னை வைத்து உருவாக்கப்பட்ட மாயபிம்பத்தை, ரஜினியே இன்று கலைத்துள்ளார்.

16 வயதினினிலே… என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரத்தின் விஷமத்தனமான காரியங்களைச் சுட்டிக்காட்டும், நடிகர் கவுண்டமணியின் கூத்து கதாபாத்திரம், பத்த வெச்சுட்டியே பரட்ட… என்ற புகழ்பெற்ற வசனத்தை உச்சரிக்கும்.

43 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்தத் திரைப்படத்தில் பரட்டையாக நடித்த ரஜினி நிழலில் செய்ததை, கடந்த கால் நூற்றாண்டு காலமாக, நிஜத்தில் அரங்கேற்றி வந்தார் அதே நடிகர் ரஜினி.

நான் அரசியலுக்கு வருவேன்… எப்போ வருவேன்… எப்டி வருவேன்… எனத் தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்… என் அரசியல் வருகை ஆண்டவனுக்குத்தான் தெரியும்… என்றெல்லாம் பேசி வந்தார். ரஜினி நடித்த திரைப்பட வசனங்களிலும், அவ்வப்போது அவர் வெளியிட்ட அறிக்கைகளிலும், அரிதாக தோன்றிப்பேசும் மேடைகளிலும் இதுபோன்ற கருத்துக்களை கொளுத்திவிடுவார் நடிகர் ரஜினி. உடனே ரஜினி விரைவில் புதிய கட்சி… ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு… மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை… என ஊடகங்கள் பரபரப்பாக்கும். மக்களிடம் பற்றிக் கொண்ட அந்தப் பரபரப்புத் தீயை, தமது திரைப்படங்களுக்கான வணிக முதலீடாக ரஜினி மாற்றிக்கொள்வதாக விமர்சனங்களும் எழுவது வழக்கம். எப்போதும் தன் அரசியல் வருகை குறித்த பரபரப்புத் தீ அணையாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார் நடிகர் ரஜினி.

ரஜினியின் இந்த சூட்சுமத்தை சிலர் சரியாக கணித்து வைத்திருந்தனர். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர். அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளில் முக்கியமானவர், பத்திரிகையாளர் சோ. அவர் ஒரு முறை தமக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவரிடம் அதற்கான எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதாக தகவல்கள் வெளியான காலம் உண்டு. ஆனால், ரஜினி என்னும் மாயபிம்பத்தின் மயக்கத்தில் மூழ்கி இருந்தவர்களுக்கு, சோ சொன்ன உண்மை உரைக்கவில்லை. ரஜினியின் ரசிகர்களும், ரஜினியின் நலம் விரும்பிகள் என்று காட்டிக் கொண்ட சிலரும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்… அவர் வந்துவிடுவார்… அவர் வந்தால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும்… என்ற ரீதியில் ரஜினியை சர்வரோக நிவாரணியாக விளம்பரம் செய்து வந்தனர்.

அதற்கு மேலும் வலுக்கூட்டும் வகையில், தமிழகத்தின் இருபெரும் அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு ரஜினி காந்த்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. 2017 டிசம்பர் 31-ம் தேதி, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகளை கூட்டிய ரஜினி, விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும், நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ஆன்மிக அரசியல்தான் நம்முடையது என்றும் சொன்னார். மேலும், போர் வரும்வரை காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்போது, அவர் குறிப்பிட்ட காலக்கெடு தற்போது நெருங்கும் நேரத்தில், கட்சி தொடங்குவது குறித்த இக்கட்டான நிலை ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், லீலா பேலஸ் ஹோட்டலில் மீண்டும் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி, ஆட்சி அதிகாரம், கட்சிப் பதவிகள், அதிமுக-வின் பலம் குறித்து, பேசிவிட்டு, இறுதியாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தின் இருபெரும் அரசியல் சக்திகளான அதிமுக, திமுக-வின் பலத்தைக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், அவர்களைப் போன்ற கட்டமைப்பு தனக்கு இல்லை என்றும், வெறும் சினிமா புகழை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டார். மேலும், தான் அரசியலுக்கு வருவதாகச் சொல்லி தமது ரசிகர்களை நடுத்தெருவில் நிறுத்த தாம் விரும்பவில்லை என்றும் ரஜினி தெளிவுபடுத்தினார். மேலும், மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற மனநிலை வரும்போது, தாம் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.

சமூகத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிகாரத்தில் வந்து அமர்ந்து கொள்பவர் தலைவனல்ல… ஒட்டுமொத்த சமூகமும் எதிராக நிற்கும்போது, தனியாளாக களமிறங்கிப் பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்துபவர்தான் தலைவர். அவரை ஏற்றுக் கொள்ளும்போது, மக்கள் அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார்கள் என்பதுதான் உலக வரலாறு உரைக்கும் உண்மை!

காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் அதற்கு உதாரணங்கள்! எப்படியோ, ரஜினியின் இன்றைய கருத்துக்கள் 25 ஆண்டுகள் நடைபெற்ற அவருடைய அரசியல் நாடகத்திற்கு திரைபோட்டுள்ளது. அந்தவகையில் ரஜினிக்கும் நிம்மதி. அவரது ரசிகர்களுக்கும் நிம்மதி!

Exit mobile version