தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் திமுக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தகர்த்து தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக அரசு, நல்லாட்சியை வழங்கி வருவதால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமான நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது என பேசி வந்த நடிர் ரஜினி மற்றும் நடிகர் கமல் இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் யாருக்கும் தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருப்பது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை போல இதுவரை இவர்கள் இருவரும் வெற்று விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினி , வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று என்றும் உணர்ச்சி பொங்க கூறினார்.
கடந்த பல வருடங்களாக அரசியல் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்து வந்த ரஜினி, இப்படி கூறியதும் அவரது ரசிகர்கள் உணர்ச்சி பொங்க கைத்தட்டல்களை எழுப்பினர். ஆனால் வழக்கம் போல அறிவிப்பை காற்றில் பறக்க விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிக்க போய்விட்டார் ரஜினி. அவ்வப்போது தானும் அரசியல் களத்தில் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக சில கருத்துக்களை காலையில் தெரிவிப்பதும், பின்னர் மாலையில் அதை மாற்றிக் கொள்வதும் என இருக்க, இறுதியில் ஒரு வாக்காளனின், யார் நீங்க என் கேள்விக்கு, நான் தான் பா ரஜினிகாந்த் என்று தன்னை அறிமுகப்படுத்தினார் , சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற ரஜினி.
ரஜினி தன் அரசியல் பிரவேசம் அறிவித்த பிறகு 2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தமிழகத்தில் நடை பெற்றன. ஆனால் எந்த தேர்தலிலும் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தெரித்து இருக்கிறார்.
தமிழக மக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை நடிகர் ரஜினிக்கு உடன் இருப்பவர்கள் யாராவது நினைப்படுத்துவது நல்லது. ஆனால் செல்லும் பல இடங்களில்
எம்.ஜி.ஆரின் ஆட்சியை என்னாலும் தர முடியும் , என்று வார்த்தை ஜாலங்களை பிரயோகிக்கிறார். அதற்கு முதலில் கட்சி தொடங்க வேண்டும் என்ற அடிப்படையை ரசிகர்கள் தங்கள் தலைவருக்கு எடுத்துச் சொல்லலாம்.. தன் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கருத்துக்களை உதிர்க்கும் ரஜினி தமிழக நலனுக்காக கமலுடன் இணைந்து பணியாற்றவும் நான் தயங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடியும்?
நடிகர் ரஜினி காலையில் ஒரு கருத்து மாலையில் ஒரு கருத்து என்று சொன்னால் , நடிகர் கமல் சொல்லும் கருத்தை தெளிந்து, புரிந்து கொள்வதற்கு ஒரு மாமாங்கம் தேவைப்படும். தமிழகத்தில் டிவிட்டரிலேயே கருத்து சொல்லி அரசியல் கட்சி வளர்க்கலாம் என்று தப்பு கணக்கு போட்டிருக்கும் நபர்களில் நடிகர் கமலும் ஒருவர்.நவீன விஞ்ஞான யுகத்தில், கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்று கமல் சொன்ன சில இடங்களில் நேரிலும், சில இடங்களில் வீடியோ கான்பிரன்சிங் மூலமும் கிராம சபை கூட்டங்களை நடத்தி விளம்பரங்களை தேடிக் கொண்டார்.
ஆனால் அப்போது அவர் நடத்தியது எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கு தான் என்பதை இப்போது நிரூபித்து காட்டியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அறிவித்திருப்பதின் மூலம் நடிகர் கமலும் இதுவரை அரசியல் களத்தில் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக முன்னெடுப்புகளை செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறும் எவருக்கும் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் திராணி இல்லை என்பதையே நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமலின் நடவடிக்கைகள் காட்டுகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
Discussion about this post