இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ள நிலையில், அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருவதால் கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே நீடித்துவந்த மோதலால், ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ரணில் வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
இந்நிலையில் ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சட்டப்படி, பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் மரணம் அடைந்தாலோ, அல்லது பதவி விலகினாலோ, அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே அதிபரால் புதிய பிரதமரை நியமிக்க முடியும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில், ராஜபக்சேவை பிரதமராக நியமித்த உத்தரவை சபாநாயகர் ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சகட்ட அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் கொழும்புவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சபாநாயகர் ஜெயசூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Discussion about this post