இந்திய அரசியல் வரலாற்றில் தனது கட்சியில் நடக்கும் சமூகநீதிக்கெதிரான நடவடிக்கையினை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல, தான் நடித்த மாமன்னன் படத்தின் மூலம் அம்பலப்படுத்தி இருந்தார் வாரிசு அமைச்சர் உதயநிதி. கட்சியின் பெயரில் மட்டுமே சமூக நீதி இருப்பதாக சினிமாவில் காட்சிப் படுத்தியிருப்பதைப் போலவே திமுகவிலும் வெறும் வாய்ச் சொல்லாகவே சமூக நீதி வெளிப்பட்டு கொண்டிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பட்டவர்த்தனமாகி உள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி துவேஷம் காட்டியது, ஆர்.எஸ்.பாரதி பிராமணர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியது, இந்துக்கள் என்றால் இவர்கள்தான் என்று ஆ.ராசா கொச்சைப்படுத்தியது, அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டத்தில் வைத்தே ஊராட்சிமன்ற தலைவியை நீங்க எஸ்.சி தானே என சாதியை அடையாளப்படுத்தி சுட்டிக்காட்டியது என்று திமுக முக்கிய தலைவர்களே சாதி ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். சமீபத்தில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முதுகலை வரலாற்று பாடப்பிரிவுக்கான தேர்வில், தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்ட கேள்வியும் இதன் ஒரு பகுதிதான்.
மாமன்னன் திரைப்படக் காட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை தனக்கு சமமான இருக்கையில் அமரவிடாமல் சாதி துவேஷம் பிடித்தவர் தடுப்பது போலவும், அதே பட்டியல் இனத்தைச் சேர்ந்த வேறு நபர் தனக்கு ஆதரவானவராக மாறியபோதும், அவருக்கு தனக்கு சமமான அளவில் இருக்கை தராமல் பிளாஸ்டிக் நாற்காலி தருவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டியலினத்தை சேர்ந்த தி.மு.க. எம்எல்ஏவை மாமன்னன் பட பாணியில் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து அக்கட்சியினரே அவமரியாதை செய்துள்ளது திமுகவின் சமூகநீதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. சாயல்குடி அருகே பெருநாழியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடியா அரசின் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ முருகவேல், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, பட்டியலினத்தை சேர்ந்த பரமக்குடி தனி தொகுதி எம்.எல்.ஏ முருகேசன் மட்டும் தனியாக ஓரு பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. சினிமா மூலமாக ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள் தங்கள் சொந்தக் கட்சியிலும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.