தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவகாற்று வலுவான நிலையில் உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பெய்யாத அளவுக்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த சில நாட்களாக பருவமழை இல்லாததால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. நீர் நிலைகள் வறண்டும் காணப்பட்டது. இந்தநிலையில் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொட்டகாஜனூர், திகினாரை, தலமலை போன்ற பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பருவமழை இல்லாமல் நீரின்றி காணப்பட்ட குட்டைகளுக்கு தண்ணீர் சற்று வர தொடங்கி இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. மீண்டும் வெயில் சுட்டெரித்த நிலையில், திருவள்ளூர், மணவாளநகர், வெங்கத்தூர், ஒண்டிக்குப்பம், அரண்வாயல், பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிளில் பரவலாக மழை பெய்தது. இதனால், நிலவிய இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.