வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், வரும் 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இதேபோல், வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், குழித்துறை, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை வைத்து அடைத்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.