சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக நல்ல மழை பெய்தது.
சென்னையில் நீண்ட நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னையின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, அடையாறு, வடபழனி, கே.கே நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. பகலில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால், கடந்த 3 தினங்களாக சென்னையின் வெப்பம் ஓரளவு குறைந்துள்ளது.
இதேபோல், புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 30 நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வறண்ட நிலையே காணப்பட்ட நிலையில் மாலை வேளையில் குளிர்ந்த காற்று வீசியது, பின்னர் கருமேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அரிமளம், கடையக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் மற்றும் குளிர் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சாலை மற்றும் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடந்துள்ளனர்.
இதேப்போல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஒத்தகுதிரை, வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், மொடச்சூர், காசிபாளையம், கொடிவேரி, உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பலத்த காற்றுடன், கன மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் பெய்த மழையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் நீண்ட நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால், அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.