அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு பின்பு காற்றின் திசை மாற வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் மழை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 4 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிரேநத்தில் நாகை மாவட்டத்தில் அதிக வெப்பம் பதிவாகும் என்றும், மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.