நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவித்தார். நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், புயல் கரையை கடக்கும் போது, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்று தெரிவித்தார்.