காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மழை நீரை சேமிக்க 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்படும் என்றார். தமிழகம் முழுவதும் மழை நீரை சேமிக்கும் வகையில், 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முதற்கட்டமாக 292 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என அவர் குறிப்பிட்டார். குடிமராமத்து பணிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,512 ஏரிகள் பரிச்சார்த்த முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post