சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகாலையில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழைநீர் வழிந்தோடியது. இந்த மிதமான மழையால் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், நிலக்கடலை அறுவடை பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளான ஆலங்குடி, திருமயம், அன்னவாசல், சித்தனவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியைடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிகளில் பலத்து காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். எரியோடு, கோவிலூர், வடமதுரை பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாநகர் பகுதியான செரீப் காலனி, ராயபுரம், கல்லாங்காடு, கருவம்பாளையம், ஆண்டிபாளையம், பாளையகாடு உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.