டியூசனுக்கு சென்ற ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்

சென்னை வில்லிவாக்கத்தில் 10 லட்ச  ரூபாய் கேட்டு ரயில்வே அதிகாரி மகனை கடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்..

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் பெரம்பூர் லோகோவில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் சஞ்சய் 10 வகுப்பு படித்து வருகிறான். சஞ்சய் கடந்த 20ம் தேதி மாலை டியூசன் சென்று விட்டு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அவனை தேடியுள்ளனர்.

இரவு ஒரு மணி வரை தேடியும் சஞ்சய் கிடைக்காததை தொடர்ந்து ராஜமங்கலம் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் 21ம் தேதி காலை சஞ்சய் அம்பத்தூர் சூரப்பட்டு சாலை வழியாக ஓடி வந்ததை கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுவனிடம் விசாரித்து, அவனை உடனடியாக அம்பத்தூர் உதவி ஆய்வாளர் குமாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிறுவன் தன்னை அடையாளம் தெரியாத நபர் கடத்தி வைத்திருந்ததாகவும், அங்கிருந்து தான் தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தான். பின்னர் சிறுவன் காணாமல் போனதாக ராஜமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குபதியபட்டதை அறிந்த உதவி ஆய்வாளர் ,சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக ராஜமங்கலம் காவல்துறையினர்   லோகேஸ்வரன் என்பவரை  கைது செய்தனர்.

மேலும், சிறுவனின் தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்ட இருந்தது விசாரணையில் தெரியவந்தது.  லோகேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

Exit mobile version