கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலோரில் தேர்தல் கூட்டத்தில் பேசிய போது “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி ந எப்படி எல்லாத் திருடர்களும் தங்களின் பெயருக்கு பின்னால் மோடியைப் பொதுப் பெயராக வைத்திருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இந்தப் பேச்சானது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதற்காக ராகுல்காந்தி மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. குஜராத் மாநில முன்னாள் மந்திரியும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கின் தீர்ப்பானது வெளியாகி ராகுல் காந்தியின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இபிகோ 499, 500 ஆகிய வழக்குகளின் கீழ் ராகுல் காந்திக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. மேலும் தற்போது முப்பது நாட்கள் ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்பி பதவியானது பறிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 படி இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையானது உறுதியாகிவிட்டது என்றால் குற்றவாளியான மக்களவை உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் பதவியானது பறிக்கப்படும். மக்கள் பிரதிதிகளின் பதவியானது மூன்று முறைகளில் தகுதி நீக்கம் செய்யப்படலாம். உறுப்பினரின் மனநிலை சரியில்லாமல் இருப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது போன்றவை காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டும். இரண்டாவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதி வேறு கட்சிக்கு மாறினால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மூன்றாவது மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். இந்த சட்டத்தில் ராகுல் காந்தி பிரிவு 8(4)ன் கீழ் வருகிறார். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆக அவரால் எட்டு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
ராகுல் காந்தி இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று மேல்முறையீடு செய்யலாம். அதன்படி தண்டனையையும் நிறுத்தி வைக்கலாம். பதவி நீக்கமும் நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உடனே வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று கேட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் அது சாத்தியம் இல்லை என்று தான் சொல்ல முடியும். மக்களவை சபாநாயகர் ராகுல் காந்தியின் தொகுதி காலியாக உள்ளது என்று கூறினால் மட்டுமே தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.