புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தாநாள் விழா இன்று. இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பற்றின ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு. அவர் புத்தகங்களை அளவு கடந்து காதலித்தார். அவரது வேதா இல்லத்தில் அவருக்கென தனியாக ஒரு பெரிய நூலகமே இருந்தது. ஆங்கிலப் புலமையும் இலக்கியப் புலமையும் வாய்க்கப்பெற்றவராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு புத்தகங்களே சிறந்த துணையாக இருந்து வந்துள்ளன. அவரது நூலகத்தில் 8,376 புத்தகங்கள் இருந்துள்ளன.
புரட்சித் தலைவி அவர்கள் இத்தனைப் புத்தகங்களையும் படித்த ஒரு பண்பாளராக திகழ்ந்துள்ளார். அவருக்கு தமிழின் முக்கிய நூலாக இருக்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறள் மிகவும் பிடித்தமான புத்தகமாகும். அதேபோல இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற புத்தகமான ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வை அடிக்கடி வாசிக்கக் கூடியவராக இருந்துள்ளார். அதேபோல தந்தை பெரியார் எழுதிய புத்தகங்களும், அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய புத்தகங்களும் அவரது புத்தக அலமாறியில் குவிந்திருந்தன.
ஆதிசங்கரின் நூல்களும், கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நூலும் அவருக்கு விருப்பமான புத்தகங்களாக இருந்துள்ளன. அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி எம்,ஜி.ஆர் ஆகியோர்களின் அரசியல் வாழ்க்கைக் குறித்த புத்தகங்கள் அவரது நூலகத்தில் இருந்துள்ளது. இதை தவிர அகதா கிறிஸ்டியனின் நாவல்களும், குஷ்வந்த் சிங்கின் படைப்புகளும் அவருக்கு மிகவும் விருப்பமான நூல்களின் பட்டியலில் இருந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ரொனால்ட் ரீகன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றோர்களின் சுயசரிதை நூல்களும் இருந்துள்ளன. முக்கியமாக இந்த புத்தகங்கள் அனைத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறிப்பு எடுத்துள்ளார்கள். அதற்கான புக் மார்க்குகளும் இந்தப் புத்தகங்களில் இருந்துள்ளன.