மக்களால் நான் மக்களுக்காகவே நான்…! இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஓர் சகாப்தம்!

மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் பெரும் தலைவி… குழந்தை பெற்றால்தான் தாயா? தமிழகத்தை தத்துதெடுத்த தானும் ஓர் தாய் தான் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய அன்பு அம்மா.. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய திரைத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி, நெருப்பாறுகளில் நீந்தி, எரிமலைகளாய் வெடித்த சோதனைகள் பல கடந்து சாதனைகள் படைத்த காவியத் தலைவி…. தமிழக மக்களுக்காகவே தன் தவ வாழ்க்கையை அர்ப்பணித்த உண்மையான தியாகத்தின் சின்னம் புரட்சித்தலைவி தமிழகத்திற்கே அம்மா வானது எப்படி? அதற்கு கொஞ்சம் தமிழக வரலாற்றை திருப்பிப்பார்க்கத்தான் வேண்டும்…

அதிமுக எனும் ஆலமரம்!

1973 மே 20-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை களமிறக்கினார் எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஏழைகளின் தேவைகளை தேடித் தேடி நிறைவேற்றிய எம்.ஜி.ஆர், அதற்காகவே ஆட்சிப்பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கினார்.

அந்த சமயத்தில், கட்சிப் பணிகளைப் பொறுப்பாகப் பார்க்கவும், தனக்குப் பிறகு, பெரியார்-அண்ணாவின் கொள்கைகளை துணிந்து நிறைவேற்றவும், கட்சியைக் கட்டிக் காக்கவும் தகுதி வாய்ந்தவர் யார்? என்பதை எம்.ஜி.ஆரின் மனம் ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், எம்ஜிஆர் எண்ணத்தில் வந்தவர் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்தாக வலம் வந்து கொண்டிருந்த அம்மு என்ற ஜெயலலிதா தான். மைசூரில் வாழ்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த ஜெயலலிதா, படிப்பிலும், அறிவிலும் படு சுட்டி,. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி என்று, செய்வன திருந்தச் செய்யும் ஓர் பர்பெக்ஷனிஸ்ட்… எடுத்த வேலைகளை ஹார்ட் ஒர்க்கர் ஆகவும், ஸ்மார்ட் ஒர்க்கராகவும் செய்து முடிக்கும் ஆற்றலை திரைத்துறையில் அம்முவாக ஜெயலலிதாவாக இருந்தபோதே, அறிந்திருந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…. அந்த ஆற்றலால்தான் அரசியலிலும் அவர் என்றுமே நெம்பர் ஒன்னாக ஜொலிப்பார் என்பதையும் கணக்குப்போட்டார் புரட்சித்தலைவர்..

புரட்சித் தலைவியின் அரசியல் வருகை..!

திரைத்துறையில் உச்சத்தைத் தொட்ட புரட்சித்தலைவிக்கு பொதுவாழ்க்கையிலும் ஈடுபாடு …. 1982-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரைச் சந்தித்து, பொதுவாழ்க்கை மீதான தன் விருப்பத்தை தெரிவித்தார். அவசரப்படவேண்டாம்… பொறுமையாக இரு… என்று அப்போதைக்கு அறிவுறுத்திய எம்.ஜி.ஆர், அரசியல் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கச் சொன்னார். மேலும், தலைமைக் கழகம் சென்று அ.தி.மு.க-வின் சட்ட திட்டங்களைப் படித்து தெரிந்து கொள்ளச் சொன்னார். அதன்பிறகு, 1982-ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி அ.தி.மு.க உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் தலையெழுத்தை அடுத்து வரப்போகும் 3 தசாப்தங்களுக்குத் தீர்மானிக்கப்போகும், புதிய சகாப்தத்துக்கான முதல் கையெழுத்து அது.

சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர்..!

1982-ல் ஜூலை 2-ம் தேதி தமிழகத்தில் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். எதிர்காலச் சந்ததி, ஒளிமயமாகத் திகழ, சத்துணவுத் திட்டம் சிறப்புடன் செயல்பட வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர், அந்தப் பொறுப்பை ஜெயலலிதாவை நம்பி ஒப்படைத்தார். சத்துணவு திட்டக் குழு உறுப்பினராக ஜெயலலிதாவை நியமனம் செய்தார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா, அந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட கண்ணும் கருத்துமாக உழைத்தார். ஏழை குழந்தைகளுக்கு உணவு ஊட்டி அன்றே தாயாய் மாறினார் புரட்சித்தலைவி..

அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்..!

1982-ம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற அ.தி.மு.க மாநாட்டில் “பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் ஜெயலலிதாவை பேச வைத்தார் எம்.ஜி.ஆர். அந்தப்பேச்சை அப்படி தன் வாழ்நாளில் நடக்கவும் செய்ததால்தான் புரட்சித்தலைவியின் பெருமை என்று வரலாறு எழுத ஆரம்பித்தது. இவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றிய புரட்சித்தலைவியிடம் தானாய் தேடி வந்தது , அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு. 1983 ஜனவரி 28-ம் தேதி, அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, அடுத்தடுத்த சவால்கள் காத்திருந்தன. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் ஜெயலலிதா சந்தித்த முதல் சவால்.

திருச்செந்தூர் கோயில் அலுவலகத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியப் பிள்ளை என்பவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி, எதிர்கட்சிகள் அப்போது பெரும் போராட்டங்களை நடத்தி, அ.தி.மு.க-வுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்த சமயம் அது..

அப்போது தான் கடப நாடகதாரி கருணாநிதி ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்று சொல்லி, மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைப்பயணம் செய்து, தமிழகத்தின் அமைதியைக் குலைக்க முயன்று கொண்டிருந்தார். இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையால், அ.தி.மு.க-வின் பெரும் தலைவர்களே, திருச்செந்தூரில் பிரச்சாரம் செய்ய கொஞ்சம் தயங்கினர். ஆனால், கிஞ்சித்தும் யோசிக்காத தைரியலட்சுமி ஜெயலலிதா இந்த சவால்களை எல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டார். 1983 பிப்ரவரி 29-ம் தேதி, திருச்செந்தூருக்கு நேராகச் சென்றார். அங்கு, கிராமம் கிராமமாக பயணித்து… வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அ.தி.மு.க-வுக்கு ஆதரவும் திரட்டினார்.

ஜெயலலிதா சென்ற இடங்களில் எல்லாம், அமோகமான மக்கள் ஆதரவு… இதைப் பார்த்து எதிர்கட்சிகள் மிரண்டன. திமுக திணறியது. தன் முதல் பிரச்சாரத்திலேயே எதிர்கட்சிகளின் வியூகங்களை உடைத்தெறிந்து, அ.தி.மு.க வேட்பாளரை வெற்றி பெற வைத்த வெற்றிமங்கை ஜெயலலிதாவுக்கு தேர்தல் வரலாற்றில், திருச்செந்தூர் இடைத் தேர்தல், முதல் தேர்தல்… முதல் பிரச்சாரம்… முதல் வெற்றி …..

பரபரப்பான நேரங்கள் தவிர்த்து, மற்ற நாட்களில், சரியாக காலை 10 மணிக்கு, தலைமைக் கழகத்தில் ஆஜராகிவிடுவார் புரட்சித்தலைவி… அங்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் நடைமுறையை செயல்படுத்தினார். அதுவரை, கட்சிக்காரர்கள், நிர்வாகிகள் மட்டும் முற்றுகையிடும் இடமாக இருந்த அ.தி.மு.க தலைமைக் கழகம், ஜெயலலிதா வருகைக்குப் பிறகு, பொதுமக்கள் அணுகும் இடமாகவும் மாறியது.

பொதுமக்களிடம் இருந்து பெற்ற மனுக்களை, உரிய அமைச்சர்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் அனுப்பிய மனுக்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற விபரங்களையும் அமைச்சர்களிடம் இருந்து வாங்கி, அவற்றையும் ஜெயலலிதா பதிவு செய்துவைத்துக்கொள்வார்.. அதன்மூலம், மக்கள் பணி, கட்சிப் பணி, ஆட்சி நடைமுறைகள் என அனைத்தையும் கற்றுக் கொள்ளும் இடமாக தலைமைக் கழகத்தை பயன்படுத்தி கொண்டார்…

மக்களவை உறுப்பினர்..!

ஜெயலலிதாவின் இந்த செயல் நேர்த்தி அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.. ஆம், புரட்சித்தலைவியின் அர்பணிப்பால் வியந்த புரட்சித்தலைவர், 1984-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக புரட்சித்தலைவியை டெல்லிக்கு அனுப்பினார். அங்கு தான் அந்த அதிசயமும் நடந்தது… நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட 185 என்ற எண் கொண்ட இருக்கைதான், ஜெயலலிதாவுக்கும் ….

மக்களிடம் செல்… மக்களோடு நில்… என்ற கொள்கைவழி செயல்பட்ட அண்ணாவின் இருக்கையும், மக்களால் நான்… மக்களுக்காகவே நான்… என்று வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் இருக்கையும் ஒரே எண் கொண்டதாக அமைந்ததில், காலம் ஒரு தீர்க்கதரிசன அறிவிப்பை அப்போதே வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எரிசக்தித் துறை மானியத்தில்தான் அண்ணா முதல்முறையாகப் பேசினார். ஜெயலலிதாவின் முதல் உரையும் அதே எரிசக்தித்துறை மானியத்தில்தான்… அந்தப் பேச்சில், தமிழகத்திற்கு பவரும் வேண்டும்… பவரும் வேண்டும் என்று அழுத்தமாக எடுத்துரைத்தார். அதாவது மின்சாரமும் வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரமும் வேண்டும் என்ற அவருடைய அந்த உரையின் வேகத்தில் ஏற்பட்ட அதிர்வில், டெல்லியே ஜெயலலிதாவைத் திரும்பிப் பார்த்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ஜெயலலிதாவின் துணிச்சலை, ஜெயலலிதா ஆற்றிய உரையின் துல்லியத்தை, அவர் வார்த்தைகளை உச்சரித்த நேர்த்தியைக் கண்டு வியந்துபோனார். மறுநாள் டெல்லியில் வெளியான அத்தனை செய்தித்தாள்களிலும், ஜெயலலிதாவின் நாடாளுமன்ற உரைதான் தலைப்புச் செய்தியே…

தன்னம்பிக்கை, ஆளுமைத் திறம், நெஞ்சுறுதி, துணிவு போன்ற குணங்களால், எதிரிகளும் மதிக்கும்படியான ஆளுமையாக டெல்லியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஜெயலலிதா. நாடாளுமன்றத்தில் இருந்த அறிவார்ந்த அகில இந்தியத் தலைவர்களின் கவனமும் ஜெயலலிதா பக்கம் திரும்பியது. அதன்மூலம், தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் டெல்லியில் தனி மரியாதையை உருவாக்கினார் ஜெயலலிதா.

பிரதமர் இந்திராகாந்தியும் ஜெயலலிதா மேல் அதிக அன்பு காட்டினார். நாடாளுமன்றத்தில் அமர்ந்து, ஜெயலலிதாவின் பேச்சை கேட்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் நேரத்தில், ஜெயலலிதாவை தனியாகச் சந்தித்து அவரின் கோரிக்கைகளை கேட்பார் இந்திராகாந்தி. அதனால், அ.தி.மு.க-வின் பெரும்பாலான கோரிக்கைகள் நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டன.

கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி ராஜினாமா..!

டெல்லியில் ஜெயலலிதாவின் பணிகள் பரபரப்பாகச் சென்ற நேரத்தில், 1984-ஆம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தஞ்சாவூர், உப்பிலியாபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. அதையடுத்து, டெல்லி பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. அந்த சயமத்தில், அவர் கடைபிடித்த சில கறார் நடைமுறைகள், அ.தி.மு.க-வில் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. கட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிரான காரியங்களில் இறங்கினர் சிலர். அதில் மனம் வருந்திய ஜெயலலிதா, தன்னால் கட்சிப் பணிகள் பாதிக்கப்பட வேண்டாம் என நினைத்து, தனது கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனாலும், அடுத்தடுத்து பெரும் சோதனைகள் அவருக்குக் காத்திருந்தன. அந்தக் காலகட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் மிகவும் இக்கட்டான காலகட்டமாகக் கழிந்தது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் எம்.ஜி.ஆர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அக்டோபர் 14-ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அதே காலகட்டத்தில், ஜெயலலிதா மீது அன்பு கொண்டவராக திகழ்ந்த இந்திரா காந்தி அம்மையாரும் கொல்லப்பட்டார். இவை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் சிறு சரிவை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அவருடன் கூட்டணி அமைத்து, 1984-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது அ.தி.மு.க.

எம்.ஜி.ஆர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து, பிரச்சாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. கட்சியில் தனக்கு வேண்டியவர்கள்… வேண்டாதவர்கள்… கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என எந்தப் பாரபட்சமும் இன்றி, கழகத்தின் வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில், கருணாநிதி, எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றி அப்பட்டமான பொய்களை, தனது பிரச்சாரத்தில் விஷத்தைப் போல் கக்கினார்.

பிரச்சாரத்தில் பீரங்கியாக வெடித்த ஜெ..!

”எம்.ஜி.ஆர் திரும்பி வரமாட்டார்… அமெரிக்காவில் அவரை ஐஸ்பெட்டியில் வைத்துள்ளனர்…” என்று பொய்களைச் சொல்லி மக்களைக் குழப்பினார் கருணாநிதி. அதை எதிர்கொள்ள முடியாமல், அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்கள் தவித்தனர். தொண்டர்கள் உற்சாகம் இழந்தனர். ஆனால், ஜெயலலிதா தனது தீர்க்கமான பிரச்சாரத்தின் மூலம், கருணாநிதியின் சதியை முறியடித்தார். ”புரட்சி தலைவர் மீண்டு வருவார்… மீண்டும் வருவார்… நல்லாட்சி தருவார்…” என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதாவின் வார்த்தைகளை மக்கள் நம்பினர். அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் பெற்றனர். அ.தி.மு.க அந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் கொ.ப.செ ஆனால் ஜெ!

கட்சியின் வெற்றிக்காக ஜெயலலிதா, எதிரிகளோடு தனி ஆளாகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது நாடாளுமன்ற கட்சித் துணைத் தலைவர் பதவியைப் பறிக்கும் வேலைகளை சிலர் திட்டமிட்டுச் செய்தனர். அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் அனுப்பியதாக, தினம் ஒரு பொய்யான டெலக்ஸ் தகவலை வெளியிட்டனர். எம்.ஜி.ஆர் இல்லாத நேரத்தில், கட்சிக்குள் நம்மால் குழப்பம் ஏற்பட வேண்டாம் என பெருந்தன்மையோடு சிந்தித்த ஜெயலலிதா, தன் பதவியைத் துச்சமெனத் தூக்கி எரிந்தார். சிகிச்சை முடிந்து தமிழகம் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக கட்சியில் நடந்த காரியங்களைக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார். 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி, அத்தனை பேரும் அசந்துபோகும் விதத்தில், ஜெயலலிதாவை மீண்டும் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார்.

செங்கோல் வழங்கினார் புரட்சித்தலைவர்!

1986 ஜூலை 14,15-ல், மதுரை மாநகரில், எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு நடைபெற்றது. அதில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக, தலைமைக் கழகத்தின் சார்பில், எம்.ஜி.ஆருக்கு ஆறடி உயரச் செங்கோல் வழங்க முடிவெடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் செங்கோலை வழங்கும் பெருமை ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி கொடுக்கப்பட்ட செங்கோலை ஜெயலலிதா கைகளில் இருந்து வாங்கிய எம்.ஜி.ஆர், அதை மீண்டும் ஜெயலலிதாவிடமே ஒப்படைத்தார். தனக்குப் பின் அ.தி.மு.க-வைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கிறேன் என்பதை எம்.ஜி.ஆர் தமிழகத்திற்கு குறிப்பால் உணர்த்திய நிகழ்வு அது.

புரட்சித் தலைவருக்குப் பின்..!

அதன்பிறகு, மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, 1987 டிசம்பர் 24-ம் நாள் எம்.ஜி.ஆர் மறைந்தார். ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. எம்.ஜி.ஆரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜெயலலிதாவுக்கு, சோதனைகள் காத்திருந்தன. காலத்தின் பக்கங்களில் அடையாளமின்றி அழிந்துவிட்ட சிலர், எம்.ஜி.ஆரின் இறுதி நிகழ்ச்சியில், ஜெயலலிதாவை திட்டமிட்டு அவமதிக்கும் வேலைகளைச் செய்தனர். அதை வேதனையோடு வேடிக்கை பார்த்த தமிழகம், ஜெயலலிதாவை, வாரி அணைத்துக் கொண்டதை காலம் விரைவில் நிருபித்தது.

எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து, தற்காலிக முதல்வரான நெடுஞ்செழியனே அந்தப் பொறுப்பில் தொடரட்டும்… அமைச்சரவையில் இருந்தவர்களே அமைச்சர்களாக இருக்கட்டும்… கட்சியில் யார் யார் எந்தெந்தப் பொறுப்புகளை வகித்தார்களோ… அந்தந்தப் பொறுப்புகளை அவர்களே வகிக்கட்டும் எனப் பெருந்தன்மையோடு, எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தைக் கட்டிக் காக்க முன்வந்தார் ஜெயலலிதா.

ஆனால், கழகம் கெட்டழிய வேண்டும் எனக் கனவு கண்ட சிலர், ஜானகி அம்மையாரை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு அழைத்து வந்தனர். அது தவறான முடிவு என்பதை உணர்ந்த நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். கட்சியை காப்பாற்றும் ஆற்றலும் திறமையும் ஜெயலலிதாவுக்கே உண்டு என்பதை உணர்ந்த அந்தத் தலைவர்கள், 1987-டிசம்பர் 31-ம் நாள், கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுச்செயலாளர் ஜெயலலிதா!

அதையடுத்து, 1988-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் காலையில், தலைமைக் கழகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூடினர். அதில், ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டார். அதேநேரம் தமிழகத்தின் அன்றைய ஆளுநர் குரானா, ஆட்சி அமைக்க ஜானகி அம்மையாருக்கு அழைப்பு விடுத்தார். கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருந்தவர்கள் ஜானகி அம்மையாரை முன்னிலைப்படுத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும், ஜானகி அம்மையார் வெற்றி பெற்றார். ஆட்சி அதிகாரம் ஜானகி அம்மையாரிடம் இருக்கும் தைரியத்தில், ஜெயலலிதாவை ஓரம் கட்ட நினைத்த சிலர், தலைமைக் கழகத்திற்குப் பூட்டுப் போட்டனர்.

இக்கட்டான நேரங்களில் ஓடி ஓடி உழைத்து கட்சிக்காகப் பாடுபட்ட ஜெயலலிதா, தலைமைக் கழகத்திற்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டார். ஆனால், நம்பிக்கை இழக்காத ஜெயலலிதா, ஆழ்வார்பேட்டையில் கட்சிக்காகப் புதிய அலுவலகத்தைத் தொடங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிய ஜானகி அம்மையாரின் ஆட்சி, 1988 ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டது. அந்த நேரத்தில்கூட, ஜெயலலிதாவும், ஜானகி அம்மையாரும் இணைந்துவிடக்கூடாது என்று கட்சிக்குள் இருந்த சிலர் கருதினர். விரைவில் தேர்தல் வருமென்பதால், ஜெயலலிதா அரசியல் செல்வாக்குப் பெற்றுவிடக்கூடாது என வெளியில் இருந்த பகைவர்கள் கருதினர். துரோகிகள் அதற்குத் துணை போனார்கள். குறிப்பிட்ட சில பத்திரிகைகள் அதற்கு ஒத்தூதின.

ஏற்கெனவே இரண்டாகப் பிளந்திருந்த கழகத்தில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘நால்வர் அணி’ என ஒரு கூட்டம் தனியாகப் பிரிந்தது. அதன் காரணமாக, கட்சிக் கொடியும் இரட்டை இலைச் சின்னமும் முடங்கின. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு சேவல் சின்னம் கிடைத்தது. ஜானகி அம்மாளுக்கு புறாச் சின்னம் கிடைத்தது. காங்கிரஸ் கபட உள்ளத்தோடு கூட்டணி அமைக்கத் திட்டம்போட்டது. சரி பாதியாகப் தொகுதிகள் பிரித்துக் கொண்டு, கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்றது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை காங்கிரஸிடம் அடகு வைக்கமாட்டேன் என்று ராஜீவின் கூட்டணிப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜெயலலிதா.

சேவல் சின்னத்தில் போட்டி..!

அதனால், 1989-ம் ஆண்டு ஜெயலலிதா நெருப்பாற்றில் நீச்சல் போட்ட அந்தக் கடினமான காலகட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்குமுனைப்போட்டி நிலவியது. போடி நாயக்கனூர் தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவர் தலைமையில், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற 26 பேரும் வெற்றி பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க மீட்கப்பட்டது..!

அந்தத் தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் ஜானகி அம்மையாரை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் உழைப்பாலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உதிரத்தாலும் வளர்ந்த கட்சியை, சூழ்ச்சிக்காரர்களின் சுயநலத்துக்காக அழித்துவிடக்கூடாது என்று முடிவு கட்டினார். கட்சியைத் திறமையாக வழிநடத்தும் தகுதி ஜெயலலிதாவுக்கே உண்டு என்பதை உணர்ந்தார். பிரிந்திருந்த அணிகளை இணைத்தார். தலைமைக் கழகத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஒன்றுபட்ட அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கழகத்தின் தேர்தல் சின்னமான இரட்டை இலை மீட்கப்பட்டது. இந்தியாவிலேயே, இழந்த சின்னத்தை மீட்ட ஒரு பெருமை அ.இ.அ.தி.மு.க என்ற கட்சிக்கே உண்டு. அதைச் சாத்தியப்படுத்தினார் ஜெயலலிதா.

மதுரை, மருங்காபுரி இடைத் தேர்தல்கள் வந்தன. ஆளும் கட்சியான தி.மு.க கொடுத்த அத்தனை நெருக்கடிகளையும் மீறி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

சூளுரைத்த புரட்சித் தலைவி..!

ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை… மக்கள் அவருக்குத் தரும் ஆதரவைக் கண்டு அஞ்சிய கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு பொய்ச் செய்தியை, தனக்குச் சொந்தமான முரசொலியில் வெளியிட்டார். அந்த விவகாரம் பூதாகரமானது. 1989 மார்ச் 25-ம் தேதி, சட்டப்பேரவையில் அது தொடர்பான விவாதம் தொடங்கியது. அதில் திட்டமிட்டு தி.மு.க கலவரம் செய்தது. ஜெயலலிதா தாக்கப்பட்டார். அன்றைக்கு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா, இனி இந்தப் பேரவைக்குள் முதலமைச்சராகத்தான் காலடி எடுத்து வைப்பேன் என சூளுரைத்தார்.

ஜெ ஜெயலலிதா எனும் நான்..!

1991 ஜனவரி 30-ம் தேதி தி.மு.க அரசை மத்திய அரசு கலைத்தது. அதையடுத்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு 225 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க 163 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் மற்றும் இளம் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமைகளும், ஜெயலலிதாவின் மணிமகுடத்தில் ஜொலிக்கத் தொடங்கின.

எம்.ஜி.ஆர் இல்லாமல் அ.தி.மு.க அழிந்துபோகும் என ஆரம்பத்தில் பகல் கனவு கண்டவர்களின் ஆசை நிராசையானது. தடைகள் உண்டெனினும், தடைகளை தகர்த்தெறியும் தடந்தோள்கள் உண்டு என்று நிருபித்துக் காட்டி, அ.தி.மு.க-வை அரியணையில் அமரவைத்தார் ஜெயலலிதா.

சமூக நீதி காத்த வீராங்கனை..!

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக போலி மதுவை ஒழிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். 1993-ம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாநில முதல்வர் உண்ணாவிரதம் இருந்தது, அகில இந்திய அளவில் அதுவே முதல்முறை. தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை 19-வது அட்டவணையில் சேர்த்து, சமூக நீதி காத்த வீரங்கனையானார். அடுத்து 2001, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வெற்றி வாகை சூடியது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியை தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த புதிய அத்தியாயத்தை, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் சாதித்துக் காட்டினார்.

பெண்களைப் போற்றிய ஜெ..!

தன் ஆட்சிக்காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளை தன் இரு கண்களாகப் போற்றினார் ஜெயலலிதா. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம், விலையில்லா சானிட்டரி நாப்கின், வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், பெண்கள் திருமண உதவித் திட்டம, தாய் சேய் நலனுக்காக, உயர்த்தப்பட்ட நிதி உதவித் திட்டம் என, எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காகவே செயல்படுத்தினார். மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப்படை, மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிருக்கான தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு, பணிபுரியும் மகளிருக்கு 9 மாத கால பேறுகால விடுப்பு, மகளிர் உடல் பரிசோதனை, தாய்ப்பால் வங்கித் திட்டம், பொது இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம் என யாரும் நினைத்தும் பார்க்க முடியாத தொலைநோக்குத் திட்டங்களை சிந்தித்துச் செயல்படுத்தினார் ஜெயலலிதா.

மக்களால் நான்.. மக்களுக்காக நான்..!

இறுதியாக, தனக்குப்பின்னாளும் அதிமுக என்னும் இந்த பேரியக்கம், நூறாண்டுகள் கடந்து மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும் என்று சட்டமன்றத்தில் முழங்கிய அந்த தேவதையின் கனவுகள் வேறொன்றுமில்லை…. தமிழகமும், தமிழக மக்களின் நலன் மட்டுமே… மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த அந்தப் பேரரசியின் கனவுகளை சுமந்து, அதிமுகவை வழிநடத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்குள்ளும், இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார், அந்த மக்களை பெற்ற மகராசி புரட்சித்தலைவி அம்மா…

Exit mobile version