ஒட்டுமொத்த மாநிலத்தையும் தனது குடும்பத்தைப் போல நேசித்தவர் புரட்சித் தலைவர். குடும்பத்தின் நலன் பெண்களைச் சார்ந்தே இருக்கிறது என்பதை உணர்ந்ததால் தான் தனது ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களைப் பார்த்து பார்த்து வகுத்தார்.
எம்.ஜி.ஆரின் பெண்கள் திட்டம்..!
எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னை இல்லாமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். பெண்களும், பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பசிக்கொடுமையால் சிறுவர், சிறுமிகள் தவறான பாதையில் போகும் சூழ்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார். இது இந்தியாவில் இதுவரை நடந்திராத சாதனை.
மின்சாரம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் புரியும். அதனால்தான், எம்.ஜி.ஆரின் வீட்டுக்கொரு விளக்குத் திட்டத்தால் வீடு மட்டுமே ஒளிரவில்லை, குறிப்பாக பெண்களின் வாழ்வும் ஒளிர்ந்தது.
விதவைப் பெண்களுக்கான திட்டம்…!
விதவை பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த காரணத்தால், விதவைகளை மறுமணம் செய்வோருக்கு 5 ஆயிரத்து 300 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.
இப்போது, ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார். பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் நலனிலும் அவர் அக்கறை கொண்டிருந்ததால்தான், பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார்.
அதே போன்று பள்ளிக் கல்வி மட்டும் போதாது, பெண்கள் மேற்படிப்புகள் படித்து குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். அதன் விளைவாக உருவானது தான் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
உதவித்தொகைத் திட்டங்கள்..!
ஆதரவற்ற பெண்களுக்கு, தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கி ஒரு முறை மட்டும் உதவக் கூடாது என முடிவு செய்த எம்ஜிஆர், அவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அவர்கள் வாழ நம்பிக்கை அளித்தார். துப்புரவுப் பணியில் ஈடுபடுவோர், மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணிபுரியும் மகளிருக்கென தங்கும் விடுதிகளை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தினார். தாய் சேய் நல இல்லங்கள் என அவர் ஆட்சியில் பெண்களுக்கென கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பெண்களை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் மதுரையில் தமிழன்னைக்கு சிலை வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
Discussion about this post