புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், அண்ணாவின் இதயக்கனி, பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு மக்கள் பணி செய்வதற்காக உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நேர்மையின் உருவாக புரட்சித் தலைவர் இருந்தார். அதற்கு சன்மானம் கட்சியை விட்டு அகற்றப்பட்டதுதான்.
புரட்சித் தலைவர் எனும் ஆளுமை..!
”பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா”
என்ற பாடலுக்கு இணங்க பண்பு குறையாமல், பாதை தவறாமல் வாழ்ந்து காட்டினார். பதவி இருந்தாலும் இல்லாவிடினும் தன் சேவையை மக்களுக்கு செய்தருளினார். மூன்றெழுத்தில் தான் அவர் மூச்சிருந்தது. ஆம் அது கடமை, அதுவும் மக்களுக்கான கடமையில் கண்ணும் கருத்துமாக சேவை புரிந்தார். அதனாலேயே கோடானா கோடி தொண்டர்கள் அவர்பின் திரண்டனர். மக்கள் தீர்ப்பே மகேசேன் தீர்ப்பு என்கிற சொலவடை உண்டு. புரட்சித் தலைவர் எனும் தங்கத் தலைவருக்கு மக்கள் கொடுத்தத் தீர்ப்புதான் முதலமைச்சர் பதவி. 1977 ஆம் ஆண்டு தீய சக்தி திமுகவை விரட்டி 1987 வரை பத்தாண்டுகள் தமிழகத்தை பொக்கிஷ பூமியாக மாற்றி வைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
மக்களுக்கானத் தலைவர் எம்.ஜி.ஆர்..!
தன் வாழ்க்கையை இலங்கையில் இருந்து தொடங்கிய புரட்சித் தலைவர், நாடக நடிகராக உழைத்து, பின் சினிமா வாய்ப்பினை பெற்று, சிறிய சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி, ஏன் வில்லனாக கூட நடித்திருக்கிறார். ஆனால் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் ஹீரோ புரட்சித் தலைவர்தான். தமிழ் என்றாலே நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகளுக்கு தெரியாது, தமிழ்மொழிக்காக புரட்சித் தலைவர் செய்த நற்காரியங்கள். பெரியார் சீர்திருத்த எழுத்துக்களை பயன்படுத்த வழிவகை செய்தார், மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றினார், மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தை நிறுவியவரும் இவரே, மேலும் தமிழ்வளர்ச்சித் துறை என்ற ஒரு துறையை உருவாக்கி தமிழ் மொழிக்காக பல நல்ல விடயங்களை செய்தார். இப்படி புரட்சித் தலைவர் பற்றி பேசினால் சொல்லிக்கொண்டே போகலாம். கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தினை, சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழை எளியக் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பெறுவற்கு காரணமாக அமைந்தார்.
இப்படி புரட்சித் தலைவர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்” என்ற பாடலுக்கு உகந்தவர், தகுதியானவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவில் வந்து அமர்பவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான்.