வெளிநாட்டில் வேலை என்றால், குடும்பப் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு நம்மில் பலரும் வெளிநாட்டிற்கு கிளம்பி விடும் சூழல் அதிகமாக உள்ளது. எப்பேர்ப்பட்ட வேலையாகினும் பணம் சம்பாதித்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில் சிட்டாக பறந்து வெளிதேசம் நோக்கி சென்றுவிடுவோம். நம் இந்தியர்களில் பஞ்சாபியர்களுக்கு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கனவு அபரிமிதமாக உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் ஒரு நூதன முறையைக் கையாண்டு வருகின்றனர். என்ன முறை அது என்பதைக் குறித்து பின்வருமாறு காண்போம்.
குடியுரிமையைத் துறக்கும் பஞ்சாபியர்கள்!
இந்தியக் குடியுரிமையை துறப்பவர்களில் முதல் இடத்தில் டெல்லிவாசிகளும், இரண்டாவது இடத்தில் பஞ்சாபியர்களும்தான் உள்ளார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒரு ஆண்டிற்கு 3124 பஞ்சாபியர்கள் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள். இதுவே ஒரு நாளுக்கு ஒன்பது பஞ்சாபியர்கள் ஆகும். 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 2,46,580 இந்தியர்கள் வெளிநாட்டு உரிமைக்காக இந்திய பாஸ்போர்ட்டினை விட்டுக்கொடுத்ததாக, இந்திய மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 60,414 பேர்கள் டெல்லிவாசிகள், 28,717 பேர்கள் பஞ்சாபியர்கள் ஆகும். மூன்றாவது இடத்தில் குஜராத்திகள்( 22,300) உள்ளனர். 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒரே சமயத்தில் இரு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றிருக்க முடியாது. எதாவது ஒரு நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். இது ஒருபுறம் இருக்க பஞ்சாபியர்கள் வெளிநாடுக்கு செல்வதற்கு ஒப்பந்த திருமணம் என்கிற ஒரு முறையைக் கையாள்கின்றனர்.
ஒப்பந்த திருமண முறை மூலம் வெளிநாடு செல்லல்!
ஒப்பந்த திருமணமுறை என்பது வெளிநாட்டு கனவுடன் இருக்கும் மணமகன் ஒருவர், நல்ல படித்த மணமகளை மணந்துகொண்டு அவரின் உதவி மூலம் வெளிநாட்டிற்கு செல்வதாகும். இதனை கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம். IELTS என்று அழைக்கப்படும் சர்வேத ஆங்கில மொழித் தேர்வினை தேர்ச்சி செய்யும் மணமகளை கரம் பிடிக்கும் முறையை பஞ்சாபிய மணமகன்கள் கடைபிடித்து வருகிறார்கள். IELTS தேர்வு தேர்ச்சி பெறுவதன் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் விசா எளிய முறையில் கிடைப்பதால், Spouse VISA மூலம் தங்களின் இணையரையும் வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதற்கு ஈடாக, மணமகனானவர், மணமகள் குடும்பத்திற்கு பணம், சொத்துக்கள் என்று அள்ளித் தருவார். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கும். இதனாலேயே IELTS தேர்வில் தேர்ச்சி பெறுவது பஞ்சாபியர்களிடையே பெரிய சாதனையாக கருதப்படும். பஞ்சாபிய ஊடங்கங்களில் இந்த ஒப்பந்த திருமண முறையானது, ஏமாற்று வேலை என்று தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.
ஏமாற்றும் திருமண ஏஜென்சிகள்!
இந்த ஒப்பந்தமுறை பெண்களை ஈர்க்க எடுக்கப்படும் மோசமான செயல் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்த திருமண முறைகளை செய்துவைப்பதற்கு திருமண ஏஜென்சிகள் சிலவை பஞ்சாபில் உள்ளன. அவை அனைத்தும் மக்களை மூளைச் சலவை செய்து, பணம் பறிக்கும் முதலைகளாக உள்ளன என்று தினசரி நாளிதழ்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் ஒருவருக்கு இது போன்ற ஏஜென்சிகளின் விளம்பரங்கள் துணிந்து இதுபோலான காரியத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இது போன்ற ஒப்பந்த திருமண முறையை நாம் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். இப்போது இது பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது இந்திய சமூகத்தின் பணநோக்கி செல்லும் மோகத்தினை துகிலுறித்துக் காட்டுகிறது. திருமணம் எனும் ஒரு வழிமுறை சடங்கினை இந்த ஒப்பந்த முறைகள் கேலிக்கூத்தாக்குகின்றன என்று ஒரு தரப்பினர் எண்ணுகின்றனர்.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இஃது வள்ளுவர் வாய்மொழி. கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவாக இருந்தால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள். பொருளாக்காக ஓடாமல், அன்பையும் பண்பையும் வளர்த்தெடுத்தால், செல்வம் வந்து குவியும் என்பது சான்றோர் கூற்று.