மாசு இல்லாத உலகத்தை உருவாக்குவதற்காக தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார பேருந்து, மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும் காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும் மின்சார பேருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் C-40 நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மேலும் இந்தியா முழுவதும் 64 நகரங்களுக்கு 5ஆயிரத்து 595 பேருந்துகளை இயக்க மத்திய அரசின் FAME INDIA திட்டத்தின் கீழ் பேருந்துகளை இயக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு 525 மின்சார பேருந்துகளை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து மின்சார வாகன கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் மின்சார வாகன தயாரிப்பில் 100 சதவீதம் வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2030-ம் ஆண்டிற்குள் 30 முதல் 35 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. இதன் முன்னோட்டமாக சோதனை ஓட்ட முறையில் 2 பேருந்துகளை சென்னையில் இயக்கப்பட்டன.
32 இருக்கைகளுடன் 54 பேர் வரை பயணம் செய்யும் வகையில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன, இந்த பேருந்தில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மின்கலன் இருப்புநிலை, வெப்பநிலை, ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து தானாகவே எச்சரிக்கை கருவி மற்றும் ரிமோட்டில் இயங்கக்கூடிய தொழில்நுட்பங்களுடன் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இயக்கப்படும் சொகுசு பேருந்துகளின் கட்டணம் அளவிற்கே மின்சார பேருந்துகளின் கட்டணமும் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் என்றும் இது போன்ற மின்சார பேருந்துகள் அதிக எண்னைக்கையில் இயக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றனர் சென்னைவாசிகள்.